Published : 30 May 2023 06:13 AM
Last Updated : 30 May 2023 06:13 AM
சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்யன், சென்னை நேப்பியர் பாலம் முதல், திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலான 14 கிமீ தூர பகுதிகளை சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதியாக அறிவிக்கக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்தஆண்டு பிரதான வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில், இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கடற்கரை சூழலியல் பாதுகாப்பில் கடல் ஆமைகள் முக்கிய பங்குவகிக்கின்றன. இவற்றின் முட்டையிடும் மையமாக கடலோர மணல்பரப்பு உள்ளது. சென்னை கடலோரபகுதிகளான நேப்பியர் பாலம் முதல், திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலான 14 கிமீ தூரம் வரை ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளில், ஜனவரிமுதல் மார்ச் மாதங்களில் மட்டும்1522 கடல்ஆமைகள் இறந்துள்ளன.
மெரினா கடற்கரையில் ஏற்கெனவே 3 முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை நாம்அனுமதித்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை அங்கு காண நேரிடும்.
கருணாநிதியின் தமிழ் இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. அங்கு எந்த கட்டுமானங்களை எழுப்பினாலும், அது விதிமீறலாகும். எனவே பேனாநினைவு சின்னம் அமைக்க மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றுள்ளார். இது தொடர்பாக ராம்குமார் ஆதித்யன் கூறும்போது, ``நான் இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக்கூடாது எனக் கோரி மனுதாக்கல் செய்திருந்தேன். தற்போது அத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எனது கோரிக்கை காலாவதியாகிவிட்டது. அதனால் மனுவை திரும்பப்பெற்றேன்'' என்றார்.
இதனிடையே, பேனா நினைவு சின்னத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து சென்னையை சேர்ந்த மீனவர் நல்லதம்பி உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார். அதே கோரிக்கையுடன் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் வரும் ஜூலை 3-ம் தேதி விசாரணை நடத்த பட்டியலிட வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT