Published : 30 May 2023 06:01 AM
Last Updated : 30 May 2023 06:01 AM

ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை கண்டித்து போக்குவரத்து ஊழியர் திடீர் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி

பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை கண்டித்து சென்னையில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எவ்வித முன்னறிவிப்பு இன்றி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களை பொருத்தவரை 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மாநகர போக்குவரத்துக் கழகத்தைப் பொருத்தவரை பணியாளர் பற்றாக்குறை என்பது தொடர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டுமுன்வைக்கப்படுகிறது.

போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை கண்டித்து
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று
திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இல்லாததால்,
கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள்.

532 ஓட்டுநர் பணி: இதற்கிடையே பணிமனைகளில் உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான ஒப்பந்த அறிவிப்பை மாநகர போக்குவரத்துக் கழகம் அண்மையில் வெளியிட்டது. அதில், போக்குவரத்து அல்லாத பணிமனை சார்ந்த ஓட்டுநர் பணிகளைச் செய்வதற்காக 532 ஓட்டுநர்களை பணியமர்த்தும் வகையில் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் கோரலாம் என அறிவிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

ஆனால், தொமுச பேரவை உள்ளிட்ட போக்குவரத்து சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கும் போக்குவரத்துக்கழக சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், ஒப்பந்தங்கள் முடிவடைந்து, நேற்று இரவு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்பட்ட ஊழியர்கள் பணிமனை ஓட்டுநர் பணிக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை மாநகர பேருந்துகள் இயக்குவதை, பணியில் இருக்கும் மாநகர பேருந்துஓட்டுநர்கள் திடீரென நிறுத்தி, பேருந்துகளை திருப்பி பணிமனைக்கு எடுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் கூடிநிற்கும்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள். படங்கள்: ம.பிரபு

முன்னறிவிப்பு இன்றி நிறுத்தம்: எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பேருந்து இயக்கத்தை ஊழியர்கள் நிறுத்தியதால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை கோயம்பேடு, கே.கே.நகர், அண்ணாநகர் உட்பட சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஊழியர்களுடன் போக்குவரத்துத் துறைஅமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, தொமுச பேரவையின் பொருளாளர் நடராஜன் அனைத்து ஊழியர்களையும் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு செல்ல அறிவுறுத்தினார். பின்னர், சென்னை மாநகர பேருந்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்க தொடங்கினர்

ஆட்டோ, டாக்சிகளில் கூட்டம்: இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் (தொமுச) பொதுச் செயலாளர் த.சரவணகுமார் கூறுகையில், ``ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் வழங்குவதை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததன் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்'' என்றார்.

இந்த போராட்டத்தால், வாரத்தின் முதல் நாளான நேற்று, மாலை பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பேருந்து வசதிகிடைக்காமல் பேருந்து நிறுத்தங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.

இதனால், பேருந்து நிறுத்தங்களிலும், பணிமனைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், ஆட்டோ, டாக்சிகளில் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x