

சென்னை: மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்குமாறு தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: திருக்கழுகுன்றம் வட்ட வருவாய் தீர்வாயம் இன்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வட்டம் மாமல்லபுரம் அண்ணா நகர் புல எண் 160/2 கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனு வழங்கியுள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
மாமல்லபுரம் மக்களின் நீண்ட கால கோரிக்கையை இந்த வருவாய் தீர்வாயத்தில் நிறைவு செய்து பட்டா வழங்க வேண்டும். இதில் மத்திய தொல்லியல் துறை ஆட்சேபணை இருந்தால், முத்தரப்பு களஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்பட்டால் நிபந்தனைகளுடன் பட்டா வழங்கி உதவிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கோரியுள்ளார்.