Published : 03 Oct 2017 03:37 PM
Last Updated : 03 Oct 2017 03:37 PM

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு அலட்சியம்: அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு செயல்படாத அரசு என்று நிரூபிப்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது உயர்கல்வி வழங்குவதற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததுதான்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமிதம் பேசும் ஆட்சியாளர்கள் அதை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்டவை உட்பட மொத்தம் 80 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர 7 கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றிற்கு ஒப்பளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை என்பது தேவையை விட மிகவும் குறைவு ஆகும். இந்த பணியிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதன் மூலம் தான் மாணவர்களுக்கு தடையின்றி உயர்கல்வி வழங்க முடியும். ஆனால், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது.

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதேநேரத்தில் புதிது புதிதாக பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்வதாக அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகின்றனர். உதாரணமாக கடந்த 2011-12ஆம் கல்வியாண்டு முதல் 2015-16ஆம் கல்வியாண்டு வரை 953 புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை கற்பிப்பதற்காக 1924 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி, நிரப்ப அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பெரும்பாலானவை இன்று வரை நிரப்பப்படவில்லை.

அதிமுக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இதுவரை 1010 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் கூட 2012-13ஆம் கல்வியாண்டில் நிரப்பட வேண்டியவை ஆகும். இந்த பணியிடங்களையே மூன்று ஆண்டுகள் தாமதமாக 2015-ஆம் ஆண்டில் தான் தமிழக அரசு நிரப்பியது. அதன்பின்னர் 2013-14ஆம் ஆண்டில் 822 பணியிடங்கள், 2015-16ஆம் ஆண்டில் 124 பணியிடங்கள் என மொத்தம் 946 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அவற்றை நிரப்புவதற்கும் தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசுக் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்பும் நோக்குடன் 1883 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டே தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்று விட்டது. தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடப்பாண்டு தொடக்கத்தில் வெளியிட்ட செயல்திட்டத்தில் 1883 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஜூலை 4-ஆவது வாரத்தில் வெளியிடப்படும், செப்டம்பர் முதல் வாரத்தில் நேர்காணல்கள் நடத்தப்பட்டு அக்டோபர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், அக்டோபர் தொடங்கிவிட்ட நிலையில் இதுவரை அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை. உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்பிக்கப்படுவதில்லை. தனியார் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களும், அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களும் அரசு உதவி பெறும் பேராசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்பட வேண்டிய உதவிப் பேராசிரியர் பணிகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நிரப்புகிறது. இதனால் மாணவர்களின் கல்வியும், உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்காக நெட்/ஸ்லெட் எழுதிக் காத்திருப்பவர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது.

மாணவர்களின் உயர்கல்வி குறித்த இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1883 பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x