

கம்பம்: மேகமலையில் இருந்து அடிவாரத்துக்கு அரிசிக் கொம்பன் யானை நேற்று அதிகாலை இறங்கியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட அரிசிக் கொம்பன் யானை, கடந்த ஏப்.29-ம் தேதி தமிழக எல்லையில் விடப்பட்டது. விண்ணேற்றிப்பாறை, மேகமலையில் சுற்றித் திரிந்த யானை கடந்த 27-ம் தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது. மிரண்டு ஓடிய யானையைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, யானையை வனப்பகுதிக்குள் துரத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மேகமலைக்கு இந்த யானை இடம் பெயர்ந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், நேற்று அதிகாலை மேகமலை அடி வாரத்துக்கு இறங்கிய அரிசிக் கொம்பன் யானை சண்முகாநதி அணை, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது.
இதனால் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன் பட்டி பகுதி மக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. திராட்சைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரிசிக்கொம்பன் யானை மீண்டும் கிராமத்துக்குள் வந்தால் அதைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர் பிரகாஷ் தலைமையில் செல்வம், சந்திரசேகரன், கலைவாணன் உள்ளிட்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்துவதற்காக தயார் நிலை யில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: யானைக்கு மயக்க ஊசி செலுத்தினால் கிறுகிறுப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கீழே சாயும். ஆகவே தரைதளத்தில் யானை இருக்கும்போதுதான் மயக்க ஊசி செலுத்த முடியும்.
மயக்கமடைந்த அரிசிக் கொம் பனை வாகனத்தில் ஏற்ற கிரேன் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் கும்கி யானைகள் மூலம் அரிசிக் கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.