Published : 30 May 2023 06:07 AM
Last Updated : 30 May 2023 06:07 AM
காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை பகுதியில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாகவும், அதை கல்லூரி நிர்வாகம் ரகசியமாக அழித்து விட்டதாகவும், புதுச்சேரி இந்திய ஊழல்எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும், அக்கல்லூரியின் இணைப்பேராசிரியருமான எஸ்.ஆனந்த்குமார் பெயரில் காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், அந்த சுவரொட்டியில், மாணவர்களின் நலன் கருதி, சட்ட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை அரசுக்கு தெரிவிக்காமல் கஞ்சா செடிகளை ரகசியமாக அழித்ததற்காக கல்லூரி முதல்வர், தொடர்புடைய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, எஸ்.ஆனந்த்குமார் வெளியிட்ட அறிக்கையில், “துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.புஷ்பராஜ் கூறியது: இது அபாண்டமான குற்றச்சாட்டு.கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள குப்பைமேட்டில்,வித்தியாசமான 2 செடிகள் வளர்ந்துள்ளதாக மாணவர்கள் ஒருசிலர் பேராசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அச்செடிகள் உடனடியாக அழிக்கப்பட்டுவிட்டன. அந்த செடிகள் கஞ்சா செடிகள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT