Published : 30 May 2023 06:15 AM
Last Updated : 30 May 2023 06:15 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் அக் கட்சியினர் அளித்த மனு:
கூடங்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த பிரச்சினையில் தலையிட்டு மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர் பேருந்து நிலைய கட்டிடப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அனைத்து பேருந்துகளும் வள்ளியூருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் இன்பதுரை கூறும் போது, ‘‘ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரை திருடி விற்கும் கும்பல் அதிகரித்துள்ளது. தமிழக சட்டப் பேரவை தலைவரின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. வைராவிகிணறு பகுதியில் அரசின் இலவச மின்சார திட்டத்தில் குடிநீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்து வருகிறார்கள்.
கனிமவள திருடர்கள்போல் குடிநீர் திருடும் கும்பல்களும் அதிகரித்துள்ளது குறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் தொகுதியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை கருப்பு துணியால் மூடப்பட்டுள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் உறுப்பினர் ம.சு. சுதர்சன், செயற்குழு உறுப்பினர் நா. காசாமுகைதீன் ஆகியோர் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை அலுவல் வழிச்செயலராகவும் கொண்டு தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் அமைப்பு தேர்தல் நடத்தப்படும்.
கடந்த 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் 2019-ல் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடைபெறவில்லை என்பதால் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் செயல்படாமல் முடங்கியுள்ளது. எனவே, அமைப்பு தேர்தலை நடத்த தனியாக ஓர் அலுவலரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒருமுறை குடிநீர்
பணகுடி நகர நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனு: பணகுடி சிறப்புநிலை பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும். இப்பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT