Published : 30 May 2023 06:51 AM
Last Updated : 30 May 2023 06:51 AM
வேலூர்: அல்லேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மாதத்தில் மலை கிராமத்துக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை கிராமத்துக்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜி, பிரியா தம்பதி. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாம்பு கடித்தது.
சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது. ஆனால், மலை கிராமத்தில் இருந்து அணைக்கட்டுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டது. அதற்குள் குழந்தையின் உடல் முழுவதும் விஷம் பரவியதால் உயிரிழந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடல் மலையடிவாரத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவுக்கு குழந்தையின் உடலை உறவினர்கள் தங்கள் கைகளால் தூக்கி சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன் விமர்சனங்களை ஏற்படுத்தின.
இந்நிலையில், அல்லேரி மலை கிராமத்துக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலை ஆய்வுக்காக சென்றார். முறையான சாலை வசதி இல்லாததால் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்கு பயணித்தார். அங்கு பாம்பு கடியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
தொடர்ந்து பலாமரத்துக் கொல்லை, வாழைப்பந்தல் ஆகிய கிராமங்களுக்கு நடந்தே சென்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அல்லேரி அத்திமரத்துகொல்லை மலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்றரை வயது குழந்தையை பாம்பு கடித்துள்ளது. அதேசமயம், ஒவ்வொரு மலை கிராமத்திலும் ஏற்கெனவே கிராம சுகாதார செவிலியர் பணிஅமர்த்தப்பட்டு அவரது தொடர்பு எண்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எனினும், குழந்தையை பாம்பு கடித்துவிட்ட பதற்றத்தில் பெற்றோர் சுகாதார செவிலியரை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் குழந்தை உயிரிழந்துள்ளது.
சாலையை பொறுத்தவரை அனைத்து மலை கிராமங்களிலும் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலைகளை செம்மைப்படுத்தி போக்குவரத்துக்கு ஏற்ற வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது. தவிர, அல்லேரி மலை கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடிக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் தார்ச்சாலை அமைக்கப்பட இருந்தது. அதற்குள் இந்த துயர நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு உள்ளபடியே வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று அடுத்து ஒரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வரும், தலைமைச்செயலரும் உத்தரவிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், விரைவில் அல்லேரி மலை கிராமத்துக்கு ஒரு மாதத்துக்குள் தார்ச்சாலை அமைக்கப்படும். மேலும், இங்கு கிளை சுகாதார நிலையம் அமைக்கவும், பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு கோபுரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT