Published : 29 May 2023 06:23 AM
Last Updated : 29 May 2023 06:23 AM
சென்னை/கரூர்: தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும்ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த 26-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 3-வது நாளாக நேற்றும் சென்னை, கோவை, ஈரோடு, கரூரில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அமைச்சரின் தம்பிஅசோக்குமார் வீடு, அபிராமபுரத்தில் உள்ள அமைச்சரின் நண்பர் மோகன் என்பவரது வீடு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்கும் ஒப்பந்ததாரர் ஈரோடு சச்சிதானந்தம்(65) என்பவரது வீடு, அலுவலகத்தில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, ஈரோடு சக்தி நகரில் உள்ள சச்சிதானந்தத்தின் வீடு, செங்கோடம்பாளையத்தில் உள்ள அவரது டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சில ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும், கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயன், அரவிந்த் ஆகியோரது வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
கரூர் ராயனூர் தீரன் நகரில் உள்ள, கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், அதே பகுதியில் உள்ள சோடா நிறுவன உரிமையாளர் மணிகண்டன், ராயனூர் சன் நகரில் உள்ள செல்லமுத்து, வடக்கு காந்தி கிராமத்தில் உள்ள பிரேம்குமார் ஆகியோரது வீடுகள், வையாபுரி நகரில் உள்ள நிதி நிறுவனம், கரூர்-கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உணவகம், பவித்திரம் பகுதியில் உள்ள ரெடிமிக்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் 3-வது நாளாகநேற்று வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.3.50 கோடி ரொக்கம் பறிமுதல்செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிதாக கட்டி வரும் வீடு: கரூர் ஆண்டாங்கோவில் ராம்நகரில் அமைச்சர் செந்தில்பாலாஜி,பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டி வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்நிலையில், புதிதாக வீடு கட்டிவரும் இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு சோதனைநடத்தினர். அங்கிருந்த பொறியாளர்கள், தொழிலாளர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக்குமார் வீட்டில் வருமான வரித் துறையினர் கடந்த 26-ம் தேதி சோதனையிட வந்தபோது, ஜவஹர் கடைவீதி கருப்பாயி கோயிலைச் சேர்ந்த குமார்(59) என்பவர், வருமான வரித் துறையினர் தன்னைத் தாக்கியதாகக் கூறி, மயங்கி விழுந்தார். இதுகுறித்து கரூர் நகர போலீஸில் அவர் அளித்த புகாரின் பேரில், வருமான வரித் துறை பெண் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருப்பாயிகோயில் தெருவில் உள்ள குமார்வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT