

உடுமலை: புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் அரசு விருந்தினராக கலந்து கொண்டது திருமுறைக்கு கிடைத்தபெருமையாக கருதுவதாக உடுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி உமா நந்தினி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் உமா நந்தினி(19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். இவரது தந்தை பாலகிருஷ்ணன் அரசு பள்ளி ஆசியராகவும், தாயார் கண்ணம்மாள் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகவும் உள்ளனர்.
பள்ளி மாணவியாக இருந்த போதே தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட உமா நந்தினி, பக்தி இலக்கிய நூல்களை வாசிக்க தொடங்கினார். கடந்த 2020-ல் தேவாரத்தில் உள்ள 795 பதிகங்களில் 8,239 பாடல்களை 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் (இண்டியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) இடம்பெற்றார். இதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறிமுகமானார்.
உடுமலை காந்திநகரில் உள்ளவிநாயகர் கோயிலில் தினமும்தேவார பாடல்களை பாடியும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தும் வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் அரசு விருந்தினராக கலந்துகொண்டார். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விழாவில் பங்கேற்ற முக்கிய தலைவர்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது.
திருமுறையினால் இந்த வாய்ப்பு கிடைத்ததாகவே கருதுகிறேன். திருமுறையில் உள்ள பாடல்களை பாடிய பின் தற்போது திருப்புகழ் பாடல்களை பாடி வருகிறேன். தொடர்ந்து பக்தி இலக்கியத்தை பரப்புவதற்கு இது ஊக்கத்தை அளித்துள்ளது” என்றார்.