

சென்னை: விமான நிலைய உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ஏ.ஜாஹீர் ஹூசைன் வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையத்துக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்வதற்கு பெரும் இணைப்புப் பாலமாக செயல்படுவது கால் டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்கள் தான்.
வாடிக்கையாளர்களை ஏற்றி, இறக்க ஒரு மணி நேரத்தில் சுமார் 300 கால் டாக்ஸிகளும், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் விமான நிலையம் வந்து செல்கின்றன. ஆனால் சென்னை விமான நிலையத்திலோ கால் டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்துவதற்கு உரிய இட வசதி இல்லை. வாகனநிறுத்த வசதி செய்து கொடுத்தால் அதற்கான கட்டணத்தைச் செலுத்த தயாராக இருந்தும் இதுவரை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால் வாடிக்கையாளர்களை இறக்கிவிட்டு அடுத்த வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும்போது, ஆட்டோ, கால்டாக்ஸிகள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுகின்றன. அந்த நேரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கால் டாக்ஸி, ஆட்டோஓட்டுநர்களை மோசமான முறையில் நடத்துகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கூடுதல் ஆணையர், துணைஆணையர் உள்ளிட்டோருக்கு மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்தக் கோரியும், காவல் துறையைக் கண்டித்தும் விமான நிலையம் முன்பு நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.