Published : 29 May 2023 06:24 AM
Last Updated : 29 May 2023 06:24 AM

சென்னை | 804 ரவுடிகள் வீட்டுக்கு சென்று போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, முன் விரோத மோதல்கள் உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ரவுடிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு நடவடிக்கையை சென்னை போலீஸார் நேற்று முன்தினம் மேற்கொண்டனர். அதன்படி, சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என804 பேரின் வீடு தேடிச் சென்று தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

மேலும், ``உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்தனர். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``சென்னையில் ஏற்கனவே, 459 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,262 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டுள்ளது. கடந்த2 மாதங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் தேடுதலை அறிந்து மேலும், 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரணடைந்து வழக்குகளில் ஆஜராகி உள்ளனர். போலீஸாரின் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x