

சென்னை: இந்தியா வல்லரசு நாடாக மாறும் என தமிழக ஆதீனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், வேளாங்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் பங்கேற்றனர்.
விழாவை முடித்துவிட்டு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ஆதீனங்கள், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலிருந்து அனைத்துஆதீனங்களையும் வரவழைத்து அவர்களிடம் ஆசிபெற்றுத்தான் பிரதமர் மோடி செங்கோலை பெற்றுக் கொண்டார். செங்கோலுக்கு புனித கங்கை நீர்தெளிக்கப்பட்டு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு சம்பிரதாய சடங்குகள் செய்யப்பட்டன. தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு வழிகோலாக அமைகிறது.
ஆதீனங்களை தனது இல்லத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு தனித்தனியாக பிரதமர் மரியாதை செய்தார். ஒரு பண்பாடுமிக்க பிரதமரை நாங்கள் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்றபோது சைவ மடத்தில் இருந்துதான் செங்கோலை கொடுத்து இருக்கிறோம். செங்கோல் கொடுத்தது சைவ மடம்தான். அந்த நன்றிக் கடனை செலுத்துவதற்காகத்தான் சைவ மதத்தை தற்போது அழைத்துள்ளனர். செங்கோல் மேலே இருக்கும் நந்தி, தர்ம தேவதை என்று கூறுவார்கள். தர்மம் என்பதுஎல்லா சமயங்களுக்கும் பொதுவானது. தமிழின் வளம் தொன்மையை சிறப்பிக்கும் விதமாக இந்த விழா அமைந்தது.
தேசத்துக்கு பெருமை: தேசத்துக்கு பெருமையை வழங்குவதாக இந்த விழா அமைந்துள்ளது. 1947-ம் ஆண்டு வழங்கப்பட்ட செங்கோல், தற்போதும் அப்படியே காட்சி அளிக்கிறது. சைவ மத பிரார்த்தனைகளோடு தொடங்கி விழா சிறப்பாக நடைபெற்றது. இனி நம்முடைய பாரத தேசமானது வல்லரசு நாடாக மாறும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.