

சென்னை: மணிப்பூர் கவலரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போது இடநெருக்கடி நிலவுவதால் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1,280 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, அதன் அடையாளமாகவும், ஆங்கிலேயர் வசமிருந்த இந்தியாவை, இந்திய மக்களிடம் ஒப்படைக்கும் விதமாக தமிழக திருவாவடுதுறை ஆதீனத்தால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை, தமிழக ஆதீனங்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கட்டித்தில் நேற்று நிறுவினார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
திருவள்ளுவர், அரசனுக்கு தேவையான 4 குணங்களில் ஒன்றாகச் 'செங்கோலை' வைத்தார்(குறள் 390). மற்ற 3 குணங்கள் கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களைக் காத்தல் ஆகியவையாகும். குறள் 546-ல் அரசனை, 'வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்' என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். 2023 ஆண்டுக்கு தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார்.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாள் வரை பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மணிப்பூர் மக்கள் வன்முறையைத் தவிர்த்துஅமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்றுஅவர் வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவுபடுத்த வேண்டுமோ? இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.