

தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு கழிவுநீர் மேலாண்மை விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது மற்றும் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது. மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன்படி, எந்தவொரு நபரும் ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சியில் கழிவுநீர் அகற்றும் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் கழிவுநீரை அகற்ற தாம்பரம் அருகே மண்ணூரான்குளம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது கால்வாய்களிலோ, நீர்நிலைகளிலோ, ஆற்றுப் படுகைகளிலோ கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கைகள் மாநகராட்சி மற்றும் காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
மேலும், கழிவுநீர் அகற்றும் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும், சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அதையும் மீறி கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சம் வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்றுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்டத் தொழில் மையத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கெனச் செயல்படுத்தும் தனிச்சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கழிவுமேலாண்மை தொழில் முனைவோர்களுக்கு வாகனங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கு மொத்த திட்டத் தொகையில் அரசு மானியமாக 35% மற்றும் வங்கிக்கடன் திரும்ப செலுத்தும்வரை 6% வட்டி மானியமாக வழங்கப்படும் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் (தெற்கு) எஸ்.ரவீந்திரநாதன், செயற்பொறியாளர் அருண்குமார், தாம்பரம் காவல்துறை துணை ஆணையர் கே.அதிவீரபாண்டியன், நகர் நல அலுவலர் அருள்ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டத் தொழில் மையம் பொது மேலாளர் மா.வித்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.