

சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம்நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோ நகர் ஆகிய இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மெட்ரோரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுரை, கோவை, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டம்139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.முதல்கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டப் பணிகளுக்கு ரூ.9,424 கோடிசெலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் ஆய்வுப் பணி நடைபெற்ற நிலையில், ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்டஅறிக்கை தயார் செய்ய, ஹைதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரித்து வழங்குமாறு, மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவானதிட்டஅறிக்கை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ரயில் நிலையத்தின் வகை, செலவுகள், செயல்படுத்தும் முறை, ரயில் நிலைய அமைவிடங்கள் உள்ளிட்டவை குறித்த முழு விவரங்களும் இதில் இடம்பெறும்” என்று தெரிவித்தனர்.