

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில், சிபிஐ-எம்எல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட 7 பேருக்கு விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
சமூகம், அரசியல் உள்ளிட்ட தளங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆளுமைகளுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாசென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.
விழாவை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். விருதாளர்களின் வாழ்க்கை பயணம் குறித்து பாராட்டுரையாற்றிய திருமாவளவன், விருதாளர்கள் 7 பேருக்கான விருதுகளை வழங்கினார். அதன்படி, ‘அம்பேத்கர் சுடர்' விருது, சிபிஐ-எம்எல் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், ‘பெரியார் ஒளி' விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜாவுக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவுக்கு ‘காமராசர் கதிர்' விருது,டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்' விருது,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு ‘மார்க்ஸ் மாமணி' விருது, பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகன் கோபாலுக்கு ‘காயிதேமில்லத் பிறை' விருது, தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு ‘செம்மொழி ஞாயிறு' விருது வழங்கப்பட்டன.
விழாவுக்கு, மோகன் கோபால் வர இயலாத காரணத்தால், அவருக்கு பதிலாக அவரது நண்பர் விஞ்ஞானி முருகன் விருதை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விருதாளர்கள் ஏற்புரையாற்றினர். விசிக தலைவர் திருமாவளவன் தலைமை உரையாற்றினார். விசிகபொதுச் செயலாளர் ம.சிந்தனைச்செல்வன் வரவேற்புரையையும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் நன்றியுரையையும் ஆற்றினர். விசிக தலைமை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.