

மதுரை: சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை நிறுத்தி வைத்திருந்த மாநகராட்சி நிர்வாகம், தற்போது திருவிழா முடிந்த நிலையில் மீண்டும் கழிவுநீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இதனால், அப்பகுதி யில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ஆற்றையொட்டிய வார்டுகளில் தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்லூர் பந்தல்குடி கால்வாயையொட்டி ரூ.2 கோடியில் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்பட்டது.
செல்லூர், மீனாட்சிபுரம், ஆனையூர் பகுதியிலிருந்து வரும் கழிவு நீரை இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புச் செய்வதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்தது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையம், மிகக் குறைந்த அளவாக தினமும் 2 எம்எல்டி கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியில், விழா நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கலப்பதைத் தடுத்து வைத்திருந்தனர்.
விழா முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதியில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்திய பிறகு மதுரை வைகை ஆற்றில் கழிவு நீரே கலக்காது என்று அதிகாரிகள் முன்பு கூறினர். இத்திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் வைகைக் கரையில் சாலைகள், பூங்காக்கள், தடுப்பணைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க முடியவில்லை.
மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை நிரந்தரமாக தடுக்கப் பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாதாள சாக்கடை திட்டம் முழுமையடைந்த பிறகு கழிவு நீர் ஆற்றில் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும். அதற்கு முன்பாக கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினர்.