Published : 29 May 2023 10:03 AM
Last Updated : 29 May 2023 10:03 AM
சிவகங்கை: தமிழகம் முழுவதும் விவசாயத் துக்கான மும்முனை மின்சாரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது. மேலும் மின்சாரத்தை ஒரே நாளில் 2 தவணையாக வழங்கு வதால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்பு 18 மணி நேரமாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் மார்ச் மாதத்திலிருந்து 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப்-1, குரூப்-2 என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, டெல்டா மாவட் டங்களில் பகலில் 2 பகுதிகளுக்கும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவில் குரூப்-1 பகுதிக்கு அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரையும், குரூப்-2 பகுதிக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்-1 பகுதிக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், குரூப்-2 பகுதிக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதிலும் சில சமயங்களில் முறையாக மின்சாரம் விநி யோகிப்பதில்லை. ஒரே நாளில் 12 மணி நேர மின்சாரத்தை 2 தவணைகளாக விநியோகிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:
ஏற்கெனவே மும்முனை மின்சாரம் வழங்குவதை 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைத்துவிட்டனர். அதையும் 2 தவணைகளாக வழங்குவதால் பம்புசெட் மோட்டார் இயக்குவதற்கு இரவு, பகலாக தோட்டத்துக்கு அலைய வேண்டியுள்ளது.
இதனால் பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் செல்வதிலும் சிரமம் உள்ளது. 12 மணி நேர மின்சாரத்தை ஒரே தவணையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT