Published : 29 May 2023 08:47 AM
Last Updated : 29 May 2023 08:47 AM

இந்தியாவின் முன்னோடியாக இருந்த தமிழக சுகாதார துறை தத்தளிக்கிறது: சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: இந்தியாவில் முதன்மையாகவும், முன்னோடியாகவும் இருந்து வந்த தமிழக சுகாதாரத் துறை தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அதிமுக ஆட்சியில் புதியமருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டதுடன், ஏற்கெனவே செயல்பட்டு வந்த கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும் சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட திமுக அரசு திறக்கவில்லை. அதேபோன்று, ஒரு சீட்டைக்கூட அதிகரிக்கவில்லை.

மாறாக, இருக்கும் நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு தடுமாறுகிற அரசாக திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, பாரம்பரியமிக்க 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 550 இடங்களை பறிகொடுத்து இருப்பது வேதனைக்கு உரியது.

இந்தியாவில் முதன்மையாகவும், முன்னோடியாகவும் இருந்து வந்த தமிழக சுகாதாரத் துறை தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதில், தமிழக முதல்வர் உடனே தலையிட்டு ஏழை, எளிய மாணவர்கள் படிக்கக்கூடிய 3 மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ இடங்களை உறுதிப்படுத்த வேண்டும். திமுகவால் முடியாவிட்டால், அதிமுக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தி பெறுவதற்கு தயாராக இருக்கிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் எம்எம்சி மருத்துவக் கல்லூரி உட்பட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. வரலாற்றில் இதுபோன்ற நிலை இருந்தது இல்லை. உச்சநீதிமன்றத்தில் சிறப்புஅனுமதியைப் பெற்றாவது நிரப்பியிருக்கலாம். இனியாவது சுகாதாரத் துறை விழித்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பதவிஉயர்வு வழங்கி, கலந்தாய்வு நடத்தப்படாததால் மருத்துவக் கல்லூரிகளில் 450 பேராசிரியர், 550 உதவிபேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு1,945 எம்பிபிஎஸ் இடங்கள் 5,225 ஆக உயர்த்தப்பட்டன. அதேபோன்று, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 465 பேர் படிக்கக்கூடிய வாய்ப்பும் கொண்டுவரப்பட்டது.

மருத்துவக் கல்லூரிகளின் உரிமம் ரத்துக்கு மருத்துவர் வருகைப் பதிவேடு பராமரிக்கப்படவில்லை, மருத்துவமனையில் சிசிடிவி பொருத்தப்படவில்லை என்று கூறுவதை அரசின் உள்நோக்கமாக பார்க்க முடியாது.

ஏனெனில், கேமராவைகூட கண்காணிக்க முடியாத அரசு எப்படி ஒரு நோயாளியை முறையாக கண்காணிக்கும்? திமுகவினர் நடத்தக்கூடிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறையான அனுமதி கிடைக்கும்போது, ஏன் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கிடைக்காமல் போனது?.இதேநிலை நீடித்தால் மேலும் சில அரசுமருத்துவக் கல்லூரிகளின் உரிமம் ரத்தாகும் சூழல் வரலாம். எனவே, தமிழக அரசு கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இதுதொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரைச் சந்தித்து அதிமுக சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x