மவுலிவாக்கம் கட்டிட விபத்து: உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடத்த தயார் - மருத்துவ துறை அறிவிப்பு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: உடல்களை அடையாளம் காண  டிஎன்ஏ பரிசோதனை நடத்த தயார் - மருத்துவ துறை அறிவிப்பு
Updated on
1 min read

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வியாழக்கிழமை மாலை வரை இந்த மருத்துவமனைக்கு 54 உடல்கள் கொண்டுவரப்பட்டன. இதில் 36 உடல்கள் அடையாளம் காணப்பட்டன. 18 உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அடையாளம் காணமுடியாமல் சம்மந்தப்பட்டவர்களின் உறவினர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் பலியானவர்களின் உறவினர்கள் சிலர், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் ஆர்.செல்வகுமார் கூறியதாவது:

விபத்து நடந்த பிறகு முதல் 2 நாட்களில் வந்த உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. அடுத்த நாள் வந்த உடல்களும் பெரும்பாலும் அடையாளம் காணப்பட்டன.

ஆனால் வியாழக்கிழமை வந்த உடல்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட உறவினர்கள் கொடுக்கும் அடையாளங்களைக் கொண்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இறந்துபோனவர்களின் முகம், ஆடைகள், பல்வரிசை, உடலின் தழும்புகள் ஆகியவை குறித்து உறவினர்களிடம் அடையாளம் கேட்டு உடல்களை ஒப்படைத்து வருகிறோம். இதனால் இப்பணியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏதேனும், ஒரு உடலைக் கேட்டு இருதரப்பினரிடையே போட்டி ஏற்பட்டால் இறந்துபோனவரின் உடல் டிஎன்ஏ சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in