

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, பயிர் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும்பயிர் சேதம், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளால் நிலவும் தண்ணீர் பிரச்சினை, விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதனிடையில், கோடை காலம்தொடங்கியது முதல் மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே விளைச்சல் நன்றாக இருக்கும். இந்த சமயத்தில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் இலவச மின்சாரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறையாகவழங்கப்படுவதில்லை. அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், விவசாயத்துக்கு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால நேரமின்றி முன்அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் உரிய காலத்துக்கு பாய்ச்ச முடியவில்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. தினசரி மின்சாரத்துக்காகவே காத்திருக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் ஒரு நாளில் 10-க்கும் மேற்பட்ட முறை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.