

சென்னை: மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரின் மண்டையை உடைத்த திருச்சி மாவட்டம், நரசிங்கபுரம் ஊராட்சி தலைவரை திமுகவில் இருந்து நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர் மத்திய ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த மகேஸ்வரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு புறம்போக்கு இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்களைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரின் மண்டையை உடைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி ஓட்டுனர் மணிகிருஷ்ணன், தனபால் உள்ளிட்ட மூன்று பேர் மீது வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.