

கரூர்: கரூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கூறியதாவது: தற்போது வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய பல்வேறு நிறுவனங்கள், நான் பள்ளியில் பயிலும் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருபவை. அந்த நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தி வருபவை.
இரண்டொரு நாளில் சோதனை முழுமையாக நிறைவு பெற்றபிறகு, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால், அதற்குரிய நடவடிக்கையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர்.
வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனைக்கு வந்தபோது, மத்திய பாதுகாப்புப்படையினர் அல்லது காவல் துறையினர் துணையின்றி வந்ததால், அங்கிருந்தவர்கள் அடையாள அட்டையைக் காட்டுமாறு கூறியுள்ளனர்.
அப்போது தான் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டன. தற்போது சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
எங்களுக்கு எத்தனை சோதனை வந்தாலும், அவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.