Published : 28 May 2023 04:13 AM
Last Updated : 28 May 2023 04:13 AM
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உரிமையாளர்கள் மாறும்போது மாறுதல் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் குடியிருப்பு சங்க விதியை மாவட்ட பதிவாளர் ரத்து செய்தது சரியானது தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2009-ல் எங்களது அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டியபோது 60 வீடுகளின் மாதாந்திர பராமரிப்பு செலவினங்களுக்காக சதுர அடிக்கு ரூ.25 வீதம் தொகுப்பு நிதியாக வசூலிக்கப்பட்டது.
கடந்த 2010-ல் அது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. எங்கள் குடியிருப்பில், உரிமையாளர்கள் மாறும்போது மாறுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்து பாலா என்பவரது வீட்டை வாங்கியுள்ள ஆஷிஷ் தவே என்பவர் மாறுதல் கட்டணம் செலுத்த மறுத்து வருகிறார்.
இது தொடர்பாக பதிவுத்துறை மற்றும் சங்கங்களின் பதிவாளரிடமும் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட பதிவாளர், குடியிருப்புகளில் உரிமையாளர்கள் மாறும் போது மாறுதல் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சங்கத்தின் துணை விதியை செல்லாது என்று அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
பரஸ்பர புரிதல் அவசியம்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தனதுதீர்ப்பில் கூறியதாவது: குடியிருப்புகளின் பராமரிப்பு செலவினங்களுக்காக தொகுப்பு நிதி வசூலிப்பது தேவையற்ற சிக்கலை உருவாக்கிவிடும். மேலும்,குடியிருப்புகளின் உரிமையாளர்கள் மாறும்போது ஒவ்வொரு முறையும் மாறுதல் கட்டணம் வசூலிப்பது தவறு. அப்படி வசூலித்தால் அந்த தொகை பல மடங்காகிவிடும். அதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
சமமாக கூடி வாழும் குடியிருப்பில் பரஸ்பர புரிதல் அவசியமான ஒன்று. எனவே, சட்ட ரீதியாக சங்க துணை விதியை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட அவசியம் இல்லை. இவ்வாறு கூறிய நீதிபதி, பதிவாளரின் உத்தரவை உறுதிப்படுத்தி, வழக்கைதள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT