

சென்னை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பெருமாள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது ஆவின் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 26 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக கால்நடை தீவனம், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு உள்ளிட்ட உலர் தீவனங்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவது, ஊக்கத் தொகை, மானிய விலையில் தீவனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராடினர்.
ஆனாலும், அரசு லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது. ஆவின் நிறுவனம் கொடுப்பதை விட தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 அதிகம் கொடுக்கும் சூழலில், ஆவினுக்கு பால் கொடுப்பதை தவிர்த்து தனியார் நிறுவனங்களை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் சென்று விட்டனர்.
எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்று, ஆவின் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை தமிழக அரசு சரிசெய்ய வேண்டும். ஆவினுக்கு கூடுதல் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தை பாதுகாத்து, பொது மக்களுக்கு தரமான பால் கிடைக்கச் செய்து, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.