Published : 20 Oct 2017 09:31 AM
Last Updated : 20 Oct 2017 09:31 AM

இயல்பாக திரியும் தலைமறைவு குற்றவாளிகள்: கட்டுக்குள் இருக்கிறதா சட்டம் ஒழுங்கு?

புதுச்சேரியில் கடைகளில் மாமூல் கேட்டு பிரச்சினை, அடிதடி தாக்குதல், சிறையில் இருந்து செல்போனில் மிரட்டல், கொலை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வெளிப்படையாக இருந்துவந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் குற்றச் சம்பவங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நிகழ்ந்து வருகின்றன.

புதுச்சேரியில் உளவுப்பிரிவு முழுமையாக செயல் இழந்துள்ளதும் இதற்கு முக்கியக் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

ரவுடி கலாச்சாரம் பெருகி வருவது குறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது காலியிடங்கள் நிரப்பப்படாதது, பதவி உயர்வுகள் நடைபெறாதது என்பன போன்ற நிர்வாக சிக்கல்களே இதற்கு காரணம் என்று பதிலளிக்கின்றனர்.

ஒரு கொலை வழக்கு தொடர்பாக எஸ்பி ஒருவர் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் சிறையில் ஆண்-பெண் கைதிகள் சந்திப்பு நிகழ்வது உறுதியாகி துணைக் கண்காணிப்பாளர், வார்டன்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

"குற்ற வழக்குகளில் தொடர்புள்ளோரே, முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு படங்களுடன் பேனர்கள் வைக்கின்றனர். அதை ஆதாரமாக கொண்டு மாமூல் வசூலிக்கின்றனர். தலைமறைவு குற்றவாளிகள் கூட இயல்பாக சுற்றித் திரிகின்றனர். விழுப்புரம், கடலூர் மாவட்ட ரவுடிகளுடன் புதுச்சேரி ரவுடிகள் இணைந்து செயல்படும் போக்கு அதிகரித்துள்ளது" என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதுச்சேரியில் நாட்டு குண்டுகள் சரளமாக புழங்குகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொழிலதிபர் வேலழகன் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ரவுடிகள் கொல்லப்பட்ட நேற்றைய சம்பவத்தின்போதும் கொலையாளிகள் 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

இக்கொலை சம்பவம் குறித்து சீனியர் எஸ்.பி (பொறுப்பு) சந்திரனிடம் கேட்டபோது, "கொலை செய்யப்பட்டவர்கள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் இல்லை. தீபாவளி என்பதால் ஊருக்குள் வந்து நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர். அப்போது இக்கொலைகள் நடந்திருக்கின்றன.

ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குற்றச்சம்பவம் குறைந்திருந்தது. பட்டாசு தயாரிக்கும் மருந்தை கொண்டே நாட்டு வெடிகுண்டு தயாரிக்கின்றனர். அதோடு பல இடங்களில் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அது தடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x