Published : 09 Oct 2017 08:40 AM
Last Updated : 09 Oct 2017 08:40 AM

திருவள்ளூர் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை செயலர் ஆய்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தொடர்வதால் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக திருவள்ளூர் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் ஏற்பட்டு வருகின்றன. 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மற்றும் சென்னை மருத்துவமனைகளில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 349 பேர் தற்போது காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 33 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருத்தணி அரசு மருத்துவமனைகளில் நேற்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் உடல் நலம் குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, மருத்துவர் களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மணவாளநகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், “நல்ல தண்ணீரை பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைத்து, டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்” என மக்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

கேரளத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 12 சுகாதார மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக் கூடியதுதான். ஆகவே மக்கள் பீதி அடைய வேண்டாம். தமிழகத்தில் 99.5 சதவீதம் பேர் டெங்கு பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 0.5 சதவீத உயிரிழப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, போலியோவை தடுத்தது போல், டெங்கு காய்ச்சலை தடுக்கவும் தடுப்பூசி போட உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x