Published : 27 May 2023 06:48 PM
Last Updated : 27 May 2023 06:48 PM
சென்னை: "தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச் சகோதரி ஜன்னத்தை கடந்த 24-ம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக் கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனித வெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப் போக்கு வன்மையான கண்டத்திற்குரியது.
உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.
என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது, நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது, ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்து, பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது, இஸ்லாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது, மாட்டுக்கறி உணவிற்கு தடை விதிப்பது என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது.ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT