கும்பகோணம் | பலத்த காற்றில் அடியோடு சாய்ந்து 1,000 வாழை மரங்கள் நாசம்

கும்பகோணம் | பலத்த காற்றில் அடியோடு சாய்ந்து 1,000 வாழை மரங்கள் நாசம்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 1000 வாழை மரங்கள் நாசமாகின; மரம் விழுந்து கோயில் சுவர் சேதமடைந்தது.

கும்பகோணத்தில் அண்மைக் காலமாக அக்னி நட்சத்திர வெயிலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று மாலை திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் காவலர் குடியிருப்பில் உள்ள மரம், காசிவிஸ்வநாதர் கோயில் பிரகாரத்திலுள்ள ஷேத்திரமகாலிங்கம் அருகிலிருந்த 100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் அடியோடு சாயந்தது. மேலும், கும்பகோணம், மகாமக குளம் கீழ்கரையிலுள்ள அபிமுகேஸ்வரர் கோயிலின் தெற்கு புற மதில் சுவற்றிலிருந்த நொன்னா மரம் விழுந்ததில், அப்பகுதி சேதமடைந்தது.

இதேபோல் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளிலுள்ள 1000-கும் மேற்பட்ட வாழை, கரும்பு, தென்னை மட்டைகள், 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. இதனையடுத்து, மின்கம்பங்கள் சில மணி நேரத்திற்குள் சீர் செய்யப்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வாழை மரம் சாகுபடி செய்யும் விவசாயி கூறியது: ”கும்பகோணம் ஆலையடி சாலையில் சுமார் 2 ஏக்கரில் வாழை மரம் சாகுபடி செய்துள்ளேன். திருமணம் மற்றும் விஷேச சுபநிகழ்ச்சிகாக மட்டும் சாகுபடி செய்வதால், அதில் தார், பூ பாதுகாப்புடன் வரை வளர்த்து, அதன் பின்னர், தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் தொடர்ந்து சுபமுகூர்த்த நாள் இருப்பதால், விற்பனைக்காக வைத்திருந்த தார், பூவுடன் இருந்த சுமார் 1000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. ஒரு வாழை மரம் ரூ. 500 விற்பனை செய்து வரும் நிலையில், பலத்த காற்றினால் ரூ.5 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல் வாழைத் தோப்புகளிலுள்ள மரங்கள் சாய்ந்துள்ளதால், வரும் சுபமூகூர்த்த நாட்களில் வாழை மரத்தின் விலை அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in