Published : 27 May 2023 04:46 AM
Last Updated : 27 May 2023 04:46 AM

வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?

இதுவரை நாம் கேள்விப்பட்டிராத அதிர்ச்சி சம்பவம் – கரூரில் வருமான வரி சோதனை நடத்தச் சென்ற அலுவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி நடக்குமா? என்னதான் நடக்கிறது..?

இந்தியாவில், பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகள் பல உள்ளன. வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அமலாக்கத் துறை உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறை உள்ளிட்டவை மாநில அரசின் கீழும் செயல்படுகின்றன. இவற்றில் ‘மென்மையான’ புலனாய்வு அமைப்பு என்றால் ஐயத்துக்கு இடமின்றி அது வருமான வரித் துறைதான்.

வருமான வரி சட்டம் 1961 பிரிவு 132 மற்றும் 133ஏ ஆகியன சோதனைக்கு வழி வகுக்கின்றன. வணிக நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகள் பி-133-ன் கீழும், பரபரப்பாக பேசப்படும் ‘திடீர் சோதனை’ பி-132-ன் கீழும் நடைபெறுகின்றன.

இவை எதுவுமே திடீரென்று முடிவு செய்யப்படுவது இல்லை. தெளிவான ஆய்வுகள், ஆழமான ஆலோசனைகள், தீவிரப் பரிசீலனைகள் ஆகியவற்றின் முடிவில், செயல் திட்டம் வகுத்து, புலனாய்வு ஆணையரிடம் சமர்ப்பித்து அவரின் அனுமதி அல்லது ஆணையின் படியே சோதனைமேற்கொள்ள முடியும். பல சமயங்களில் இந்த நடைமுறைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகும் கூட, உண்மைத் தன்மையை மேலும் உறுதி செய்து கொள்ள வேண்டி, சோதனைக்கான ஆணையரின் அனுமதி கிடைக்காமல் போகலாம். இவை எதுவும் வீணாய் போகாது. எப்போதேனும் எங்கிருந்தேனும் இது தொடர்பாக மேலும் சில நம்பத்தகுந்த தகவல் கிடைக்கலாம்; கசியலாம். அப்போதுசோதனை நடைமுறை மீண்டும் உயிர் பெறலாம்.

ஒருவர் ஆய்வாளராக இருந்து தகவல் சேகரித்துத் தந்த சில வழக்குகள், அவர் அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற பிறகு சோதனையில் முடிவதை சாதாரணமாகப் பார்க்கலாம். வேறு ஒன்றுமில்லை; மிக முக்கியமான ‘சிறு பொறி’ முன்னர் கிடைக்காமல் போய் இருக்கலாம்; இப்போது அதுவாகவே தேடி வந்து இருக்கலாம்! உலகம் முழுக்க புலனாய்வு அமைப்புகளில் நிலவும் நடைமுறைதான் இது.

வருமான வரியைப் பொறுத்த மட்டில்,புலனாய்வுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுவிட்டது. உயர் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளில் நிரந்தரக் கணக்கு எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆகி விட்டது. எனவே எவரும் தப்புவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. வங்கிகள், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்து அலுவலகங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகள் மூலம் வருமான வரித் துறைக்கு வரும் தகவல்கள்; இத்துடன், இத்றையின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மற்றும் பிறர் தருகிற ரகசியத் தகவல்கள் சோதனையை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வருமான வரித் துறையின் ஆய்வு அல்லது சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத அல்லது முறையாக வருமான வரி விதிப்புக்கு உட்படாத வருமானம் ஏதும் கண்டறியப்பட்டால் அதன் மீதுவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையைசெலுத்தி விட்டால் வழக்கு முடிந்து போகிறது. வருமான வரித் துறை குறிப்பிடும் வருமானம், வரி, வட்டி, அபராதம் சரியில்லை என்று தோன்றினால், முறையீடு, மேல் முறையீடு என்று, சட்டப்படியான வழிகளில் சென்று சரிசெய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.

எத்தனை சோதனைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டோம்.. ஒன்றில்கூட முடிவுதெரியவில்லையே… என்னதான் ஆயிற்று..? இந்தக் கேள்வி எழுவது நியாயமே. ஆனால் இது குறித்த தகவல்கள் எதையும் வருமான வரித் துறை வெளியிட இயலாது. காரணம், வருமான வரி விதிப்புஎன்பது துறைக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். இது குறித்த விவரங்களை வெளியிட, துறைக்கு அதிகாரம் இல்லை.

முக்கியமான செய்தி: – எந்தத் தனிநபர் அல்லது நிறுவனம் செலுத்தும் வருமான வரி பற்றி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழும் கூட கேட்டுப் பெற முடியாது. பிரத்யேக நீதிமன்ற ஆணைப்படி, ஒருவரின் வருமான வரி விவரங்களை நீதிமன்றம் மூலம் மட்டுமே பெற முடியும். ஆனால் தனிநபர் அல்லது நிறுவனம் இது குறித்த தகவல்களை தாமாக முன்வந்து அறிவிக்கலாம். எந்தத் தடையும் இல்லை. அதாவது ‘சோதனைக்குப் பிறகு என்னவாயிற்று..?’ என்கிற கேள்விக்கான விடையை, சோதனைக்கு உள்ளானவரிடம் கேட்டுப் பெறலாம்!

சோதனைக்கு வரும் அரசு அலுவலர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்வதில் என்ன தவறு..? நிச்சயமாகத் தவறு இல்லை. அது ஒருவரின் உரிமையும் கூட. சோதனைக்காக ஓரிடத்தில் நுழையும் முன்பாக அலுவலர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை. ஆனால் அடையாளத்தைக் கோர வேண்டியவர் யார்..? யாரிடம் சோதனை அலுவலர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்..? இடையூறு எற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சிக்கும் கும்பல், அடையாள அட்டையை காட்டச் சொல்வது, வெளிப்படையான அச்சுறுத்தல் அன்றி வேறில்லை.

கரூரில் நடந்த அசம்பாவிதம் பற்றி சிலர்கூறும் விளக்கம் விந்தையானது. சோதனைதொடர்பாக காவல் துறைக்கு சொல்லப்படவில்லை என்கின்றனர். ஆமாம். உண்மை. காவல்துறை மட்டுமன்று; யாருக்குமே இந்தத் தகவல் சொல்லப்படுவதில்லை. வெளியாட்களை விடுங்கள்; சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது. சோதனையை முன்னின்று நடத்துகிற மிகச் சிலர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. இந்த அளவுக்கு ரகசியம் பாதுகாக்கப் படுவதால்தான் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் வெற்றி பெறுகின்றன.

உரிய முறையில் காவல்துறைக்குச் சொல்லாமல் அரசு அலுவலர்கள் பணிசெய்யச் செல்வது ஆபத்தானது என்று ஒப்புக் கொள்வது போல் இந்த விளக்கம் அமைந்துள்ளதே.. கவனிக்கத் தவறிவிட்டார்களோ..?

சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x