எதிர்க்கட்சிகள் இணைவதை தடுக்கவே வருமான வரி சோதனை - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் இணைவதை தடுக்கவே வருமான வரி சோதனை - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது மத்திய அரசு.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. கவுன்சிலர் தேர்தல்போல, அனைத்துப் பகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அங்கு பணத்தைக் குவித்தனர்.

ஆனாலும், கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் மிகப் பெரிய வெற்றியை அளித்துள்ளனர். கர்நாடக தேர்தல் முடிவு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவர் முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும் செய்தி வந்து கொண்டிருப்பதால், இதை திசை திருப்பும் முயற்சியாக, வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை பகுதியில் அதிமுக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த மாவட்டப் பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில கரூர், கோவையில் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றது. எனவே, அவரை முடக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இதை செய்துள்ளார்.

சோதனைக்கு முன் உள்ளூர் போலீஸாரை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், திட்டமிட்டு போலீஸாருக்கு தெரிவிக்காமல் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரே, எங்களுக்கு தகவல் இல்லை என்கிறார்.

வருமான வரித் துறையினர் வந்தவுடன், கட்சியினர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். திட்டமிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த, வருமான வரித் துறை அதிகாரிகளை அடித்ததாக செய்தி வெளியிட்டு, அரசைக் களங்கப்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தேர்தலுக்குப் பின்னர், அனைத்து எதிர்க் கட்சிகளும் வேகமாக இணைவதைத் தடுக்கவே, இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திட்டமிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. வாகனம் மீதான தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in