

சென்னை: திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆளுமைப் பரிமாற்றத்தை அடையாளப்படுத்துவது தொடர்பாக ராஜாஜி உள்ளிட்டோர், திருவாவடுதுறை ஆதீனத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்த அம்பலவாண தேசிகரைத் தொடர்புகொண்டு, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளை செய்துதரச் சொல்லிக் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, சென்னை உம்மிடி பங்காரு நகைக் கடையில் 5 அடி உயரத்தில் தங்கத்தினாலான செங்கோல் செய்யப்பட்டது. அந்த செங்கோலுடன் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்ற திருவதிகை குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அங்கு தம்பிரான் சுவாமிகள் நேருவிடம் செங்கோலை வழங்கினார். அப்போது, தேவாரம் கோளறு பதிகத்தில் உள்ள 11 பாடல்கள் பாடப்பட்டன. இந்த நிகழ்விற்கு அனைத்து வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.
ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக இவை அனைத்தும் பொய் என்று சிலர் கூறுவது வருத்தம் அளிக்கிறது.
வரும் 28-ம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவுகிறார். அப்போது தேவாரம் பாடப்படுமா என்பது, அன்றுதான் தெரியவரும். இதற்காக டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. எனவே, நாங்கள் மே 27-ம் தேதி (இன்று) டெல்லி செல்கிறோம்.
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவதால், தமிழகத்துக்குப் பெருமை கிடைத்துள்ளது. இவ்வாறு திருவாவடுதுறை ஆதீனம் கூறினார்.