

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத்(29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார். அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர்ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம் எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார். இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் நேற்று முன்தினம் சாலை மறியல் நடந்தது.
இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.