Published : 27 May 2023 06:01 AM
Last Updated : 27 May 2023 06:01 AM
விழுப்புரம்: பொறியியல் படிப்பில், தமிழ் வழி பாடப்பிரிவுகளை மூடுவது தொடர்பாக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் வழியிலான இயந்திரவியல், கட்டிடவியல் பாடப் பிரிவுகளில் சமீபகாலமாக மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது.
இதையடுத்து 11 உறுப்புக் கல்லூரிகளில், சேர்க்கை குறைந்த பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 20-ம் தேதி அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கட்டிடவியல், இயந்திரவியல் பாடப்பிரிவில் தமிழ் வழிக் கல்வியை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக எனக்கோ, அரசுக்கோ தெரியவில்லை. இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். ‘பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது’ என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை அறிவித்ததே திமுக ஆட்சியில்தான். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு உதவித்தொகை அளித்ததும் திமுக அரசில்தான். வரும் ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் மற்றப் பாடப்பிரிவிலும் தமிழ் வழி பாடப்பிரிவு விரிவுப்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் வருங்காலங்களில் படிப்படியாக உயர்த்தப்படும்.
துணை வேந்தர் இப்படி அறிவித்தது தவறு என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதனால்தான் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் செய்வதற்காக பேசி வருகிறார். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT