

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பேயம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி (39). இவரது மனைவி பிரியா (34). இவர்களுக்கு மோகன கிருஷ்ணன் (8) என்ற மகனும், வர்ஷனா (6) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று வீட்டருகே உள்ள கிணற்றில் குழந்தைகளுக்கு சக்திவேல் நீச்சல் கற்றுத் தந்தார். மோகன கிருஷ்ணனுக்கு டியூப் மூலம் நீச்சல் கற்றுக் கொடுத்த பின் டியூப் கட்டிக் கொண்டு வர்ஷனா கிணற்றில் குதித்தபோது, மோகன கிருஷ்ணன் மீது விழுந்துள்ளார். அப்போது டியூப் நழுவியதால் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். சக்திவேல் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து வருவதற்குள் குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடல்களை மீட்டனர். கீழராஜகுலராமன் போலீஸார் விசாரிக்கின்றனர்.