

கோவை: தரமான, மேம்பட்ட, அதிக மகசூல் அளிக்கும் சிறுதானிய வகைகளை உருவாக்கி, அது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. மேலும், 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாம் அரிசியை அதிகம் உற்பத்தி செய்வதன் காரணமாக சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தமிழகத்தில் அதிகப்படியான சர்க்கரை நோயாளிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு அரிசியை அதிகப்படியாக நாம் சார்ந்திருப்பது ஒரு காரணம் என்கின்றனர்.
பல்வேறு வகையான உணவு வகைகளை நாம் கொண்டிருந்தாலும், அதில் பெரும்பாலானவை அரிசியை அடிப்படையாக கொண்டு செய்யப்படுகின்றன. வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையானது, பெருந்தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற வேண்டுமெனில் மாற்றுப்பயிர்களை நாம் நாட வேண்டும். சிறுதானியங்கள், அதற்கு விடையாக இருப்பவை.
சிறுதானியங்கள், கடினமான காலநிலையையும் சமாளித்து வளரக்கூடியவை. மேலும் சத்துமிகுந்தவை. நீர் குறைவாக உள்ள இடங்களிலும் அவற்றை பயிரிட முடியும். சிறுதானிய உற்பத்தியை நோக்கி நாம் நகர வேண்டும். சிறுதானிய உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு பங்காற்றும் வகையில், தரமான, மேம்பட்ட, அதிக மகசூல் அளிக்கும் சிறுதானிய வகைகளை உருவாக்கி, அது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மீண்டும் செங்கோல்: 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க ஏதேனும் சடங்கு இருக்கிறதா என தெரிந்துகொள்ள விரும்பினர்.
அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், அதிகாரத்தை மாற்ற என்ன நடைமுறை என்று கேட்டனர். நேரு, ராஜாஜியிடம் இதுபற்றி கேட்டார். ராஜாஜி, திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார். சென்னையில் புதிய செங்கோல் தயாரிக்கப்பட்டு, மவுண்ட்பேட்டனிடம் அளிக்கப் பட்டது.
தொடர்ந்து திருஞான சம்பந்தரின் தேவார பதிகத்தை பாடி, அன்றைய பிரதமர் நேருவிடம் அந்த செங்கோல் அளிக்கப்பட்டது. அந்த வழக்கத்தை நாம் எப்படியோ மறந்துவிட்டோம். அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள அந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், விவசாயி ஒருவர், "உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை, நாட்டின் பிற பகுதியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.