Published : 01 Oct 2017 11:25 AM
Last Updated : 01 Oct 2017 11:25 AM

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க மின்னுற்பத்தியை குறைப்பதா? அன்புமணி ராமதாஸ் சாடல்

மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தினாலும் பரவாயில்லை என்று மின்னுற்பத்தியை நிறுத்தி விட்டு அதிக விலை கொடுத்து தனியார் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கிக் கொண்டிருக்கிற்து என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து போனாலும் பரவாயில்லை... தங்களில் ஊழல் தொழில் தடையின்றி நடக்க வேண்டும் என்பது தான் ஆட்சியாளர்களின் கொள்கையாக இருக்கிறது. அதனால் தான் மின்வாரியத்திற்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று மின்னுற்பத்தியை நிறுத்தி விட்டு அதிக விலை கொடுத்து தனியார் மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது அரசு.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடசென்னை மின்னுற்பத்தி நிலையத்தில் 1200 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 804 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் சொல்லப்படும் காரணம் தமிழகத்தில் மின்சார உற்பத்தி அதிகரித்து விட்டது... மின்சாரப் பயன்பாடு குறைந்து விட்டது என்பது தான். மேலோட்டமாகப் பார்க்கும் போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்டதைப் போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால், இதன் பின்னணியில் தலைவிரித்தாடுவது மின்சாரக் கொள்முதல் ஊழல் தான்.

தமிழ்நாட்டின் நேற்றைய அதிகபட்ச மின்சாரத் தேவை 11,367 மெகாவாட் ஆகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின்நிலையங்கள், நெய்வேலி மற்றும் கூடங்குளம் மின் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு இந்த தேவையை நிறைவேற்றிவிட முடியும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடமிருந்து 3189 மெகாவாட் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து அரசு வாங்குகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் மின் தேவை குறைந்து விட்டது. இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவைக் குறைப்பது தான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்க முடியும். ஆனால், தமிழகத்தின் பினாமி ஆட்சியாளர்களோ தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவைக் குறைக்காமல், மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களின் உற்பத்தியை குறைத்திருக்கிறது பினாமி அரசு. மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் மூலம் 4320 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், நேற்றைய நிலவரப்படி 865 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 3555 மெகாவாட் உற்பத்தித் திறனை மின்வாரியம் பயன்படுத்தாமல் வீணாக வைத்திருக்கிறது. இதற்குக் காரணம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டவாறு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டும் என்பது தான்.

மின்சாரக் கொள்முதலுக்காக நீண்டகால ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டால், அந்த மின்சாரத்தை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்; அதனால் தான் தனியார் மின்சாரத்தை வாங்கி, மின்வாரிய மின்னுற்பத்தியை குறைத்திருக்கிறோம் என அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்படலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் மின்னுற்பத்தித் திறன் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஆட்சியாளர்களுக்கும், மின்வாரியத்திற்கும் நன்றாக தெரிந்திருக்கும். நீண்ட கால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் என்பது 15 ஆண்டுகளுக்கானது என்பதால், எதிர்கால மின் தேவை மற்றும் உற்பத்தியை கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட வேண்டும். 2015-ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரே அளவில் 3300 மெகாவாட் மின்சாரம் வாங்க ஆட்சியாளர்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அர்த்தமல்ல... அதிக விலைக்கு மிக அதிக காலத்திற்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து அதன் மூலம் ஊழல் செய்யத் துடிக்கின்றனர் என்று தான் பொருள்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ரூ.3.42 மட்டுமே. இதன் உற்பத்தியை நிறுத்தி விட்டு, தனியாரிடமிருந்து ரூ.4.91 முதல் ரூ.6.00 வரை விலை கொடுத்து வாங்குவதால் ஒப்பந்த காலத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.5000 கோடி வரை இழப்பு ஏற்படும். எனவே, அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தனியாருக்கு சாதகமாக மின்னுற்பத்தியை குறைத்தது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x