

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில், 12 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவ கிராமங்களில் ஒன்றான நடுவூர் மாதாகுப்பம் மீனவர்களில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருந்ததால், கடந்த 2-ம் தேதி பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இருதரப்பு மீனவர்களும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தற்காலிக தடை விதித்தார்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீண்டும் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மீனவர் பஞ்சாயத்து சபை சார்பில் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 20-ம் தேதி பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தற்காலிக தடையை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா நேற்று முன்தினம் நீக்கி உத்தரவிட்டார்.