

காஞ்சிபுரம்/ மதுராந்தகம்: காஞ்சிபுரத்தில் சட்ட விரோத மதுபான பாட்டில்கள் விற்பனையை தடுக்க போலீஸார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனிடையே மதுராந்தகம் அருகே சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மாவட்ட காவல் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகளின் அருகே சட்டவிரோதமாக மதுபான பாட்டில் விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே வையாவூர், செவிலிமேடு, கீழ்கதிர்பூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் அருகே உள்ள கடைகளில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. போலீஸாரின் நடவடிக்கையை தொடர்ந்து அப்பகுதி கடைகள் மூடப்பட்டன.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் கூறும்போது, கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில் விற்பனையை தடுப்பதற்காக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்பேரில், சில இடங்களில் கடைகளை அதன் உரிமையாளர்களே மூடியுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என்றார்.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுப்பதற்காக செங்கை மாவட்ட எஸ்பி சாய் பிரணீத் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்பேரில் டிஎஸ்பி பரத் தலைமையிலான போலீஸார் மதுராந்தகம், சித்தாமூர், சூனாம்பேடு, முதலியார் குப்பம், பனையூர், தாழுதாளி குப்பம் பகுதிகளில் நேற்று சோதனை நடந்தது.
இதில், முதலியார் குப்பம் பகுதியில் முட்புதர்களில் சுமார் 105 லிட்டர் சாராய ஊறல் மற்றும் பேரல்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், உயிரிழப்புகள் ஏற்பட்ட கிராமப்பகுதிகள் மற்றும் செய்யூர், எல்லையம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட உள்ளது.