

சென்னை: நானோ, என் தம்பியோ, குடும்ப உறுப்பினர்களோ கடந்த 2006-ம்ஆண்டு முதல் ஒரு சதுரஅடி நிலம்கூட வாங்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வருமான வரித் துறைசோதனை என்பது எங்களுக்குபுதிது அல்ல. சட்டப்பேரவை தேர்தல் இறுதிகட்ட பிரச்சாரத்துக்கு முன்பாக வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டோம். அப்போது, கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றனர். இது பிரச்சாரத்தை தடுக்கும் நடவடிக்கை என்று கூறினோம்.
தற்போது எனது இல்லம் தவிர, என் சகோதரர், உறவினர்கள் அவர்களது நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடங்கள் அனைத்தும் ஏற்கெனவே முறையாக வருமான வரி செலுத்துபவர்களுக்கு சொந்தமானவை. சோதனையின்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாக தகவல் வந்ததும், உடனே அங்கு இருப்பவர்களை தொடர்பு கொண்டு வெளியேறுமாறும், சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினேன். அவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
சோதனையின்போது, என்ன ஆவணங்களை கேட்டாலும் வழங்க தயாராக உள்ளோம். எவ்வளவு நாட்கள் நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இந்த சோதனையை எதிர்கொள்ள உறவினர்கள், நண்பர்களும் தயாராகவே உள்ளனர்.
சோதனைக்காக அதிகாலையில் என் தம்பியின் வீட்டுக்குசென்றவர்கள், கதவை திறப்பதற்குகூட காத்திருக்காமல், ‘கேட்’ மீது ஏறி குதித்து உள்ளே சென்ற வீடியோ எனக்கு கிடைத்தது. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 1996-ல் ஒன்றியக்குழு உறுப்பினராக சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றேன். அன்றுமுதல் இன்று வரை 26 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருக்கிறேன். கரூர் மக்கள் தொடர்ந்து என்னைவெற்றி பெறச் செய்துள்ளனர். பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு வழங்கினார். அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் நான் வேட்புமனுவில் என்ன தாக்கல் செய்தேனோ, அதன்பிறகு இதுவரை ஒரு சொத்து மட்டுமே விற்பனை செய்துள்ளேன். நானோ, என் தம்பியோ, குடும்ப உறுப்பினர்களோ ஒரு சதுரஅடி நிலம்கூட வாங்கவில்லை. பதிவு செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையில் எப்போதும் ஈடுபட மாட்டேன்.
என் தம்பி மனைவிக்கு அவரதுதாயார் இஷ்டதானமாக கொடுத்த இடத்தில்தான் வீடு கட்டப்பட்டு வருகிறது. 2006-ம்ஆண்டுக்கு பிறகு புதிய சொத்துகள் எதுவும் நாங்கள் வாங்கவில்லை. வாங்கவும் மாட்டோம். இருக்கும் சொத்துகளே போதும். வருமான வரி சோதனையில் தவறு நடந்திருப்பதாக கண்டறிந்தால் சரிசெய்ய தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.