

காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதில் அண்ணா நகர், பர்மா காலனி, வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு, செக்காலை, செஞ்சை, கணேசபுரம், மீனாட்சிபுரம், கோவிலூர் சாலை உள்ளிட்ட சில இடங்களில் 15 நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆலங்கட்டி மழை பெய்ததால் காரைக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்று பலமாக வீசியதால் பெரியார் சிலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் கிடந்த மரங்களை தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் அகற்றினர். மழையால் மாலை 5.30 மணி முதல் இரவு வரை மின்தடை ஏற்பட்டது.