Published : 27 May 2023 06:16 AM
Last Updated : 27 May 2023 06:16 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பேருந்துநிலையம் அருகே இடமாற்றப்பட்டுள்ள மேலூர் ரயில் நிலையம்இன்று (மே 27) முதல் செயல்படத்தொடங்குகிறது. இந்த ரயில் நிலையத்தில் இன்று முதல் ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அண்மையில் மூடப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே மேலூர் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய இடத்தில் மேலூர் ரயில் நிலையம் இன்று (மே 27) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
புதிய ரயில் நிலையத்தில் இன்று (மே 27) முதல் சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் (அதிகாலை 5.44 மணி), மணியாச்சி- தூத்துக்குடி சிறப்புரயில் (அதிகாலை 3.33), திருநெல்வேலி- தூத்துக்குடி பயணிகள் ரயில் (காலை 8.54), மணியாச்சி- தூத்துக்குடி சிறப்பு ரயில் (இரவு7.50), தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயில் (மாலை 6.20), தூத்துக்குடி- மணியாச்சி சிறப்பு ரயில் (காலை 8.30), தூத்துக்குடி- மணியாச்சி சிறப்பு ரயில் (இரவு 10.14) ஆகிய ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை சிறப்பு ரயில்: இந்த நிலையில் மும்பை- தூத்துக்குடி- மும்பை இடையே கோடைகால சிறப்பு ரயிலை தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. முதல் சிறப்பு ரயில் (01143) நேற்று (மே 26) வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டுள்ளது.
இது இன்று (மே 27) சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது. நாளை (மே 28) காலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் (01144) புறப்பட்டு வரும் 29-ம் தேதி மதியம் 3.40 மணிக்கு மும்பையை சென்றடைகிறது.
இதேபோன்று வரும் 2-ம் தேதி மும்பையில் இருந்தும், 4-ம் தேதி தூத்துக்குடியில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி, 2-ம் வகுப்பு ஏசி, 3-ம் வகுப்பு ஏ.சி, படுக்கை வசதி மற்றும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ரெய்ச்சூர், வாடி, காலபுரகி, சோலாப்பூர், தாண்ட், புனே, லோனவாலா, கல்யாண், தாதர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT