மழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா?- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்

மழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா?- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்
Updated on
2 min read

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல சில நாட்களுக்கு முன் செங்குன்றம் அருகே கல்லூரி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் மழையின்போது மின்சாதனங்களைப் பயன்படுத்துவோர், திறந்தவெளியில் நிற்போர் மீதே மின்னல் தாக்குகிறது.

செல்போன் மட்டுமல்லாமல் எந்த வயர்லெஸ் மின்சாதனங்களைப் பயன் படுத்தினாலும் மின்னல் தாக்காது என அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறைத் தலைவர் எஸ்.முத்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: செல்போன் பயன்படுத்துவதால் மின்னல் தாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் செல்போன் உட்பட எந்த வயர்லெஸ் கருவி வழியாகவும் மின்னல் தாக்குதல் நடப்பதில்லை. மாறாக மின் இணைப்பில் செருகப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து. உதாரணமாக, செல்போனை சாதாரணமாகப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால் சார்ஜரில் இணைத்து பயன்படுத்தும்போது மின்னல் தாக்க வாய்ப்புள்ளது. செல்போன் கதிர்வீச்சுக்கும் மின்னலுக்கும் தொடர்பில்லை.

வீட்டின் மீது மின்னல் தாக்கினாலோ அல்லது அருகாமை பகுதியில் மின்னல் தாக்கினாலோ, சுவர்கள் மற்றும் மின் இணைப்பு வழியாக மின்னலின் அதிகளவு மின்சாரம் பாயும். அப்போது சார்ஜரில் போடப்பட்ட செல்போனைப் பயன்படுத்தும்போது, பயன்படுத்துவோர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும். அதேவேளையில் கேபிளால் இணைக்கப்பட்ட லேண்ட்- லைன் தொலைபேசியால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே மழை பெய்யும்போது லேண்ட்- லைன் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மழை வரும்போது மரங்களுக்கு அடியிலோ அருகாமையிலோ நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் நீர்நிலைகளின் அருகிலும் இருக்கக்கூடாது. திறந்த வெளியில் இருப்பதை தவிர்த்து, வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும். மின்னல் தாக்கும்போது மின்சாரம், கம்பி வேலிகளில் பயணிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை தொடக் கூடாது.

ஒருவேளை மழை பெய்யும்போது வெளியில் சிக்கிக் கொண்டால், காருக்குள் சென்றுவிட வேண்டும். காருக்குள்ளும் கையை குறுக்கி வைத்திருக்க வேண்டும். வானொலி, ஜிபிஎஸ் வசதிகளை இயக்கக் கூடாது. அதேபோல, வீடுகளின் மீது சிறிய இடிதாங்கி அமைப்பைப் பொருத்துவது மின்னல் தாக்குவதில் இருந்து காப்பாற்றும்.

பொதுவாக குறிப்பிட்ட இடத்தில்மின்னல் தாக்கினால், அதே இடத்தில் மற்றொரு மின்னல் தாக்க வாய்ப்பு அதிகம். எனவே மின்னல் தாக்கிய இடங்களை அந்தந்த பொதுமக்களுக்கு தெரிவிக்க வசதி ஏற்படுத்தலாம். ஏஎம் (Amplitude Modulation) வானொலிகள் மின்னல் தாக்கிய அலைவரிசையைத் தெரியப்படுத்தும். அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தெந்த இடங்களில் மின்னல் தாக்கும் என்பதை கணித்து, மக்களுக்கு தெரிவித்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என்றார்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in