செங்கோல் சர்ச்சையில் காங். vs பாஜக முதல் கரூர் ஐ.டி சோதனை பரபரப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 26, 2023

செங்கோல் சர்ச்சையில் காங். vs பாஜக முதல் கரூர் ஐ.டி சோதனை பரபரப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 26, 2023
Updated on
3 min read

செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை - கரூரில் பரபரப்பு: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு ரத்தான நிலையில், மீண்டும் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. அதன் நீட்சியாகத்தான் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு, அவருடைய நிறுவனங்கள், செந்தில்பாலாஜியின் நண்பர் வீடு என்று அதிகாரிகள் ரெய்டுக்கு ஒரே நேரத்தில் ஆஜராகினர்.

கரூரில் வருமான வரித் துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம், அதிகாரிகள் வந்த கார் கண்ணாடி உடைப்பு என ரெய்டு நிகழ்விடமே போர்க்களமானது.

ஐ.டி ரெய்டு - செந்தில்பாலாஜி, திமுக விளக்கம்: தன்னுடைய இல்லத்தில் ஐடி சோதனை நடைபெறவில்லை என்று தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "வருமான வரித் துறையின் சோதனை எத்தனை இடங்களில் நடந்தாலும், அவர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்க தயாராகத்தான் இருக்கின்றோம். எத்தனை நாட்கள் இந்த சோதனையை நடத்தினாலும், முழு ஒத்துழைப்பு வழங்கவும், அதை எதிர்கொள்ளவும் என்னுடைய சகோதரர்கள், உறவினர்கள் என அனைவருமே தயாராகத்தான் இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமான வரித் துறை சோதனை நடப்பது பாஜகவின் மிகக் கேவலமான அரசியல் என்றும், செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் திட்டம் என்றும் திமுக கருத்து தெரிவித்துள்ளது.

திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு: “கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறைத் தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-க்கு தள்ளிவைப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், "கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்" என்று அவர் கூறினார்.

மே 28 கறுப்பு நாளாக கடைபிடிக்கப்படும்: விசிக: சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பதை கண்டித்து மே 28-ஆம் தேதி கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் திறப்பு விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் கோரி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் "இது போன்ற விசயங்களைப் பார்ப்பது இந்த நீதிமன்றத்தின் வேலை இல்லை. நீங்கள் ஏன் இதுபோன்ற வழக்குகளைத் தாக்கல் செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற விசயங்களை நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட விருப்பம் இல்லை" என்றும் கூறி பொது நலவழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.

‘செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நடந்ததற்கு ஆதாரமில்லை’: நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

‘ஆதீன வரலாற்றை பொய் என்கிறது காங்கிரஸ்’- அமித் ஷா: "காங்கிரஸ் கட்சி இப்போது மற்றுமொரு வெட்கக்கேடான செயலை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் ஒரு புனிதமான சைவ மடம். நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோலின் முக்கியத்துவம் குறித்து திருவாவடுதுறை மடம் தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தற்போது திருவாவடுதுறை மடத்தின் வரலாற்றை போலி என்கிறது" என்று காங்கிரஸ் மீது உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சுமத்தியுள்ளார். காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதனிடையே" நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் நோக்கில் செங்கோல் கொடுக்கப்பட்டதை பொய் அல்லது போலி என்று கூறுவது வருத்தத்திற்குரியது" என்று திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸிடம் ஆதரவு கோரும் அரவிந்த் கேஜ்ரிவால்: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் அரவிந்த் கேஜ்ரிவாலின் காங்கிரஸ் நோக்கிய இந்த நகர்வு நிகழ்ந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in