Published : 26 May 2023 02:44 PM
Last Updated : 26 May 2023 02:44 PM
சென்னை: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT