Published : 26 May 2023 01:55 PM
Last Updated : 26 May 2023 01:55 PM

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ - திமுக காட்டம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை சோதனை நடப்பது பாஜகவின் மிகக் கேவலமான அரசியல் என்றும், செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் திட்டம் என்றும் திமுக கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், "கர்நாடகத் தேர்தலில் அனுமன் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பாஜவினர் நாடகம் ஆடினார்கள். கர்நாடகத் தேர்தலில் பணத்தை குவித்தார்கள். ஒரு கவருக்குள் ஐந்து ரூ.2000 நோட்டுகளை வைத்து அதன் மீது தாமரை சின்னத்துடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வீடியோ வந்தது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இல்லை. ஆனால், கர்நாடகத் தேர்தலில் பாஜவினர் ரூ.2 ஆயிரம் நோட்டை விநியோகம் செய்தனர்.

கர்நாடகத் தேர்தல் முடிவு காஷ்மீர் முதல் குமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று இருக்கும் நேரத்தில், தினசரி போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டே உள்ளன. இதை திசை திருப்ப வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்துடன் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில், முதலீடுகள் தொடர்பான செய்திகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு இவ்வாறு வருமானவரி சோதனை நடத்தி உள்ளது.

இந்தச் சோதனை பற்றி திமுகவினர் எந்த காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது. பாஜக என்றால் என்ன, அதன் அதிகாரம் என்பது என்ன என்று சில நாட்களில் செந்தில்பாலாஜி தெரிந்து கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். எனவே, செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு அண்ணாமலை செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கு அவரது பேச்சுதான் உதாரணம்.

முதல்வர் ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இப்படிச் செய்வது பாஜகவின் மிகக் கேவலமான அரசியலைக் காட்டுகிறது. ஒரு சோதனை நடப்பதற்கு முன்பாக மாநில காவல் துறைக்கு கூறி, உள்ளூர் காவல் துறையுடன்தான் ரெய்டு நடத்துவது வழக்கம். ஆனால், திட்டமிட்டு செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. ஆனால், காவல் துறைக்கு தகவல் இல்லை எஸ்பி கூறுகிறார்" என்று கூறினார்.

முன்னதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலை தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர். | வாசிக்க > அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

இதனிடையே, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. | சோதனைக்கு வந்த வருமானவரித் துறை அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம், தள்ளுமுள்ளு: கரூரில் பரபரப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x