அரசுக்கே தெரியாமல் அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்: தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடுவது தொடர்பாக பொன்முடி விளக்கம்  

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
Updated on
1 min read

சென்னை: தமிழ் வழி பாடப்பிரிவுகளை மூடுவது தொடர்பாக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் வழியிலான இயந்திரவியல், கட்டிடவியல் பாடப் பிரிவுகளில் சமீபகாலமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதையடுத்து 11 உறுப்புக் கல்லூரிகளில், சேர்க்கை குறைந்த பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதையடுத்து தமிழ்வழி பாடப்பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் தெரிவித்தார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், "தமிழக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in