Published : 26 May 2023 11:14 AM
Last Updated : 26 May 2023 11:14 AM

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுடன் தமிழகத்துக்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் 3 முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து, வர்த்தக உறவுகள், முதலீடுகள் குறித்து பேசியதுடன், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து, சிங்கப்பூர் உள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பானின் ஒசாகாவுக்கு சென்றார். அவரை ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். இந்தப் பகுதியில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று, ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ‘ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் கென் பாண்டோவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x