Published : 17 Oct 2017 09:29 AM
Last Updated : 17 Oct 2017 09:29 AM

மத்திய நிதிக்குழு மானிய விடுவிப்பில் முறைகேடு, அரசியல் குறுக்கீடு இல்லை: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில்

மத்திய நிதிக்குழு மானியத் தொகை விடுவிப்பு, திட்டப் பணிகளை செயல்பாடுகளில், முறைகேடுகளோ அரசியல் குறுக்கீடோ எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதி ஆணைய நிதி ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் அத்தியாவசிய தேவைக்கான மின் கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் மத்திய நிதி ஆணையம் அளித்துள்ள அடிப்படை மானியத் தொகை ஒப்பந்தங்களுக்கு முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது’ என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதை, வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய அல்லது மாநில அரசுகள் ஒரு புதிய திட்டத்தை வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தான் செயல்படுத்தும். அப்போது பல்வேறு தணிக்கைகளுக்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படும். இந்த நடைமுறைகளை எல்லாம் உணராமல், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் இந்த அரசின் மேல் காழ்ப்புணர்ச்சியுடன் உண்மைக்கு புறம்பான செய்திகளை அவதூறு ஏற்படுத்தும் எண்ணத்துடன் வெளியிட்டுள்ளார்.

நடப்பாண்டில், 14-வது மத்திய நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில், முதல் தவணைத் தொகையாக மாநகராட்சிகளுக்கு ரூ.252 கோடியே 79 லட்சமும் நகராட்சிகளுக்கு ரூ.195 கோடியே 91 லட்சமும் மாநில அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகளுக்கும், குடிநீர் கட்டணம், மின்கட்டணம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள், புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சாலைகள் சீரமைத்தல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானம் என வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ள பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அப்போது நடக்க இருந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவசரகதியில் ரூ.ஆயிரம் கோடியில் சிறப்புச் சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய முத்திரைத்தாள் மீதான மிகு வரித் தொகையில், 50 சதவீத தொகையை உள்ளாட்சி அமைப்புகள் சாலை அமைப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக உள்ளாட்சி அமைப்புகள் இத்தொகையை அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த இயலாமல் போனது. மேலும், 14-வது மத்திய நிதிக்குழு மானியத் தொகை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அவசியமான தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முழு அதிகாரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசின் குறுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 5 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரத்து 964 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 571 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

மத்திய நிதிக்குழு மானியத் தொகை விடுவிப்பிலும், திட்டப் பணிகளை செயல்படுத்துவதிலும் முறைகேடுகளோ, விதி மீறல்களோ, அரசியல் குறுக்கீடோ எதுவும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x